இன்று தொடங்குகிறது: பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்

முதல் நாளில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து மற்றும் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன.
Image Courtacy: ICC
Image Courtacy: ICC
Published on

சார்ஜா,

9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், 'புதுமுகம்' ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நாக்-அவுட் சுற்றில் இருந்து மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு.

6 முறை உலகக் கோப்பையை ருசித்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கே இந்த முறையும் வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகள் இந்த முறை பல்வேறு வியூகங்களுடன் களமிறங்கி உள்ளன.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அதிகபட்சமாக 2020-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. முந்தைய உலகக் கோப்பையில் அரைஇறுதியில் நெருங்கி வந்து தோற்றது. இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்தமுறை இறுதிப்போட்டியில் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக்கில் நாளை இரவு 7.30 மணிக்கு நியூசிலாந்தை துபாயில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் முதல் நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com