

மவுன்டமாங்கானு,
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது ஒரு நாள் போட்டியில் இறங்குகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் மழை குறுக்கிட்ட போதிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு கிடைத்தது. அவ்விரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றது. ஹாமில்டனில் நடக்க இருந்த 3-வது ஆட்டம் இடைவிடாது பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று (வெள்ளிக்கி ழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கு சில தினங்களாக மழை இல்லை. இன்றைய தினமும் மழை ஆபத்து இல்லை என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், போட்டி எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக இந்திய கேப்டன் சுப்மன் கில், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல், வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜ் ஆகியோர் வெலிங்டனுக்கு சென்று விட்டனர். இதனால் இந்திய அணியை ஸ்ரேயாஸ் அய்யர் வழிநடத்துகிறார். கில், ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் களம் காணுகிறார்கள். இருப்பினும் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருப்பதால் தொடர் மீதான ஆர்வம் குறையவில்லை. வெற் றிப் பயணத்தை நீட்டித்து, தொடரை சொந்தமாக்குவதற்கு நமது வீரர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். முதல் இரு ஆட் டங்களில் சோபிக்காத ரோகித் சர்மா பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வரிசை மேலும் வலுவடையும்.
முந்தைய ஆட்டங்களுக்குரிய ஆடுகளம், சீதோஷ்ண நிலை முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்பட் டது. ஆனால் இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு கைகொடுக்கும் என கணிக்கப்பட்டிருப்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், நாதன் சுமித், ஹென்றி நிகோல்ஸ் ஆகி யோர் டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனால் அந்த அணியி லும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. அவர்களுக்கு பதிலாக பின் ஆலென். மிட்ச் ஹே. டியான் பாக்ஸ்கிராப்ட், நிக் கெல்லி ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. அத்துடன் கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் பிரெட் ரேண்டல் அழைக்கப்பட்டுள்ளார்.
தொடரை வெல்வதற்குரிய வாய்ப்பை இழந்து விட்ட நியூசிலாந்து அணி தொடரை சமன் செய்வதற்கு முனைப்பு காட் டுகிறது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைப்பதற்காக கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நியூசிலாந்து தொடக்க வீரர் டிம் செய்பெர்ட் கூறுகையில், 'இந்திய அணியில் சில முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட் டிக்கு சென்று விட்டதால் அது எங்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என்று சொல்லமாட்டேன். அவர்களுக்கு பதிலாக யாரை இந்தியா இறக்கினாலும் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். களத்தில் இருப்பவர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே யாருடைய இடத்திற்கு யார் வந்தா லும் முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்குள்ள சூழ லுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக பந்து வீசி வருவது பாராட்டுக்குரியது' என்றார்.