அம்பயரிங் முதல் போட்டி அட்டவணை வரை... இந்தியாவுக்கு சாதகமாக முடிவுகள் - பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து

இந்திய அணிக்கு சாதகமாக பல விஷயங்கள் நடைபெறுவதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அம்பயரிங் முதல் போட்டி அட்டவணை வரை... இந்தியாவுக்கு சாதகமாக முடிவுகள் - பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து
Published on

இஸ்லாமாபாத்,

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதுமே உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் குஷ்தில் ஷா இந்திய அணிக்கு சாதகமாக பல விஷயங்கள் நடைபெறுவதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

"இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அழுத்தம் அல்ல"

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் அழுத்தம் குறித்து பேசிய குஷ்தில் ஷா, "இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது பெரிய அளவில் அழுத்தம் இருக்காது. நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு மட்டுமே இருக்கும். அவர்களை வெல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் சிறப்பானது" என்று அவர் தெரிவித்தார்.

"அம்பயரிங் முதல் டிரஸ்ஸிங் ரூம் வரை..."

இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு சாதகமாக பல முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

"போட்டிகளில் நடக்கும் பல விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமாக செல்கின்றன. சில நேரங்களில் அம்பயர்களின் முடிவுகள், டிரஸ்ஸிங் ரூம் தொடர்பான ஏற்பாடுகள், போட்டி நடத்தும் விதம் போன்றவை அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக தோன்றும். இத்தகைய சூழ்நிலைகளையும் தாண்டி பாகிஸ்தான் வெற்றி பெறும் போது அது மிகப்பெரிய திருப்தியை தரும்" என்று குஷ்தில் ஷா கூறியுள்ளார்.

சமீபகாலத்தில் இந்தியாவின் ஆதிக்கம்

குஷ்தில் ஷாவின் கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முன் 2025 ஆசிய கோப்பையில் இறுதிப்போட்டி உட்பட மூன்று முறை பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அதேபோல், 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது.

பாகிஸ்தானின் கடைசி வெற்றி எப்போது?

பாகிஸ்தான் அணி கடைசியாக இந்தியாவை 2022 ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்றில் வீழ்த்தியது. ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, 2017-ல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com