ஐ.பி.எல்.2025: கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் பெங்களூரு கேப்டன் கூறியது என்ன..?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு வெற்றியை பதிவு செய்தது.
image courtesy:twitter/@IPL
image courtesy:twitter/@IPL
Published on

கொல்கத்தா,

18-வது ஐ.பி.எல். தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டியில், "இந்த போட்டியில் அழுத்தம் இருந்தாலும் எனக்கு ஒரு நல்ல நாளாக அமைந்தது. இப்படியே தொடரை வென்றால் அது சிறப்பானதாக இருக்கும். சுயாஷ் ரன்கள் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர் எங்கள் முக்கிய விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர், அதனால் நான் அவரை ஆதரித்தேன். அனைத்து பெருமையும் சுயாஷ் மற்றும் குருனாலையே சாரும்.

13 ஓவரில் இருந்து இரு பந்து வீச்சாளர்களும் தைரியத்தையும் உறுதியையும் காட்டினர். அவர்களது விக்கெட் எடுக்கும் மனநிலை மிகவும் அற்புதமாக இருந்தது. விராட் கோலி போன்ற ஒரு வீரர் உங்களிடம் இருப்பது மிகவும் சிறந்தது. விளையாட்டின் சிறந்த வீரரிடமிருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com