

மும்பை,
ஐபிஎல் 2026 லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அந்த 4 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறியது என்றே சொல்லலாம்.
இந்த அணிகள் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வது என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்ற ஒன்று. ஏதேனும் அதிசயம் நடந்தால் தவிர இந்த அணிகள் முன்னேறுவது கடினம்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 14 புள்ளிகளுடன் (11 போட்டிகளில் 7 வெற்றிகள்) முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த அணிகள் இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிடும். இறுதிப்போட்டிக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகள் (Qualifier 1) கிடைக்கும் என்பதால், இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடங்களிலேயே நீடிக்கப் போராடி வருகின்றன.
மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 5 அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் இரண்டாம் பாதியில் சறுக்கல்களைச் சந்தித்துள்ளன.
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் தொடக்கப் போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும், இக்கட்டான நேரத்தில் மீண்டு வந்து தற்போது டாப்-4 ரேசில் இணைந்துள்ளன.