

புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற 62-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜுரேல் - சூர்யவன்ஷி இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யவன்ஷி 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பராக் அதிரடி காட்டினார். அரைசதமடித்த பராக், 51 ரன்னிலும், ஜுரேல் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட தவறினர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளும், நிகிடி மற்றும் திவாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் கே.எல்.ராகுல் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் அபிஷேக் போரல் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில், 51 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக கே.எல்.ராகுலுடன் சாஹில் பராக் ஜோடி சேர்ந்தார்.
சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 34 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த நிலையில் சாஹில் பராக் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கே.எல்.ராகுல் 56 (42) ரன்களில் போல்ட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 4 ரன்னும், டேவிட் மில்லர் 9 ரன்னும் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக அக்சர் படேலுடன், அசுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இறுதியில் அதிரடி காட்டிய அசுடோஸ் சர்மா 18 (5) ரன்களும், அக்சர் படேல் 34 (18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரிஜேஸ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சனகா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.