

புது டெல்லி,
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 25) மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பந்து வீச உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ள டெல்லி, பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மறுபுறம், இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ். 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளைப் பெற்றுள்ள பஞ்சாப், இன்றைய போட்டியிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர முனைப்பு காட்டும்.
ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை மோதியுள்ளன. இதில் ஆச்சரியப்படும் விதமாக இரண்டு அணிகளும் தலா 17 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த சீசனில் வெற்றி நடை போடும் பஞ்சாப்பின் வேகத்திற்கு டெல்லி முட்டுக்கட்டை போடுமா அல்லது பஞ்சாப் தனது முதலிடத்தைத் தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.