

மும்பை,
ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே மும்பைக்கு 'பிளே-ஆப்' செல்ல சின்ன வாய்ப்பு உள்ளது.
மறுபுறம், லக்னோ அணிக்கும் இது ஒரு வாழ்வா-சாவா ஆட்டமாகும். முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற அந்த அணி, அடுத்த 5 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியைத் தழுவியது. இதனால் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.
சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவிய மும்பை அணி, சொந்த மண்ணில் இன்று வெற்றியைப் பதிவு செய்ய முனைப்பு காட்டும். அதேநேரம், பிளே-ஆப் ரேஸில் நீடிக்க லக்னோ அணிக்கு இந்த வெற்றி மிகவும் இன்றியமையாதது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.