2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல.. ஏனெனில்.. - கங்குலி

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல.. ஏனெனில்.. - கங்குலி
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவர்கள் என எதிர்பார்த்த வேளையில் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர்கள் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே உலகக்கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடுவது எளிதானதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. அவர்கள் விளையாட வருடத்திற்கு 15 ஆட்டங்கள் மட்டுமே இருக்கிறது. எனவே என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லை. அவர்களுக்கும் என்னைப் போலவே விளையாட்டு தெரியும் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள். ஆனால் விளையாட்டு அவர்களிடமிருந்து விலகிச் செல்லும், அல்லது அவர்கள் விளையாட்டிலிருந்து விலகிச் செல்வார்கள் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com