ஜெய்ஸ்வால், ராகுல் மீண்டும் ஏமாற்றம்... சரிவிலிருந்து மீட்ட படிக்கல் - சாய் சுதர்சன்: 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ 106/2

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்தியா ஏ அணி
Published on: 

லிங்கன்,

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 4 நாள் கொண்ட அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்சில் தடுமாற்றம்

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 4 நாள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நியூசிலாந்தின் லிங்கன் நகரில் நடைபெற்று வருகிறது

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களும், கே.எல்.ராகுல் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். சாய் சுதர்சன் ரன் ஏதுமின்றியும், கேப்டன் துருவ் ஜூரல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தேவ்தத் படிக்கல் 32 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்தார். யாஷ் ரதோட் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

317 ரன்கள் குவித்த நியூசிலாந்து ஏ

இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாளில் தொடர்ந்து விளையாடி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில் 204 ரன்கள் முன்னிலை பெற்றது.

படிக்கல் - சாய் சுதர்சன் அபாரக் கூட்டணி

இதைத்தொடர்ந்து 204 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கே.எல்.ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ஏ அணி 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பிறகு இணைந்த தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் ஜோடி நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பைத் தடுத்தது. சிறப்பாக விளையாடிய படிக்கல் அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ஏ

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ அணி 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் 56 ரன்களுடனும், சாய் சுதர்சன் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இந்தியா ஏ அணி 98 ரன்கள் பின்தங்கியுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com