

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரராக விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளார். TNT Sports உடனான கலந்துரையாடலில், ஒவ்வொரு முக்கிய கிரிக்கெட் நாட்டிலிருந்தும் தனக்குப் பிடித்த வீரரைத் தேர்வு செய்யுமாறு ஆண்டர்சனிடம் கேட்கப்பட்டது. அப்போது இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலியின் பெயரைக் குறிப்பிட்டார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இருந்தாலும், இந்தியாவிலிருந்து தனது விருப்பமான வீரராக கோலியைத் தேர்வு செய்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விராட் கோலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையிலான போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்துள்ளன. குறிப்பாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் இருவருக்கும் இடையே பலமுறை நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆண்டர்சனின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கோலி தடுமாறினார். அந்தத் தொடரில் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆண்டர்சன் அவரை நான்கு முறை ஆட்டமிழக்கச் செய்தார். அந்தத் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆனால் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கோலி தனது ஆட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து மண்ணில் ஆண்டர்சனின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். இதன்மூலம் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் இருவருக்கும் இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் கோலியை மொத்தம் ஏழு முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதேநேரத்தில் ஆண்டர்சனுக்கு எதிராக கோலியின் பேட்டிங் சராசரி 43.57 ஆக உள்ளது.
ஆண்டர்சன் தனது விருப்பமான வீரர்களை மற்ற நாடுகளிலிருந்தும் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவிலிருந்து ஷேன் வார்னே, இங்கிலாந்திலிருந்து ஜோ ரூட், இந்தியாவிலிருந்து விராட் கோலி, நியூசிலாந்திலிருந்து டிம் சவுத்தி, பாகிஸ்தானிலிருந்து பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் இலங்கையிலிருந்து சனத் ஜெயசூர்யா ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 2003ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், 2024ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 188 போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.