இளையோர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்
இளையோர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
Published on

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த அரையிறுதியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையுடன் மோதியது. மழையால் 20 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 138 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, பாகிஸ்தானுடன் மல்லுகட்டியது. மழையால் 27 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 26.3 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com