

புதுடெல்லி,
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியில் கபில் தேவ் கூறியதாவது:
“விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது மிகப்பெரிய தவறு. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முடிவை நினைத்து அவர் வருத்தப்படுவார். அவர் ஓய்வு பெற்றிருக்கக் கூடாது. மற்ற வீரர்களைவிட அவருக்கு உடல்தகுதி சிறப்பாக இருக்கிறது. 25 வயது வீரருடன்கூட உடல்தகுதியில் அவரால் போட்டியிட முடியும்.
கோபத்தில் ஓய்வு பெறுவது சரியான முடிவு அல்ல. மொகிந்தர் அமர்நாத் போல, பலமுறை அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் மீண்டும் திரும்பி வந்து தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்” என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி கடந்த 2025-ம் ஆண்டு மே 12-ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 14 ஆண்டுகள் நீடித்த அவரது டெஸ்ட் பயணத்தில் 123 போட்டிகளில் விளையாடி 9,230 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 46.85 ஆகும்.
கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியே அவர் கடைசியாக விளையாடிய ஆட்டமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் 770 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்திய அணியின் கேப்டனாக 68 டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்ட கோலி, அதில் 40 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அவரது தலைமையில்தான் 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. மேலும், இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்திலும் வைத்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது, இந்த வடிவம் தன்னை ஒரு வீரராக உருவாக்கியதாகவும், தனது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்ததாகவும் கோலி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கோலியின் ஓய்வு முடிவை விமர்சித்துள்ள கபில் தேவின் கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.