“கோலி, ரோகித் சர்மா தான் பாகிஸ்தான் பவுலர்களின் இலக்கு” - தெண்டுல்கர் சொல்கிறார்

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா தான் பாகிஸ்தான் பவுலர்களின் இலக்காக இருப்பார்கள் என்று இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
“கோலி, ரோகித் சர்மா தான் பாகிஸ்தான் பவுலர்களின் இலக்கு” - தெண்டுல்கர் சொல்கிறார்
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டம் மான்செஸ்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. உலக கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. சந்தித்த 6 முறையும் இந்தியாவுக்கே வெற்றி வசமாகியிருக்கிறது. அந்த பீடுநடையை தொடர்வதற்கு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சில யோசனைகளை வழங்கியுள்ளார்.

தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தான் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களது விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்துவதில்தான் பாகிஸ்தான் பவுலர்களின் கவனம் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. குறிப்பாக பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிரும், வஹாப் ரியாசும் அவர்களை விரைவில் வெளியேற்றுவதில் குறியாக இருப்பார்கள். அதே சமயம் கோலியும், ரோகித் சர்மாவும் நிலைத்து நின்று நீண்ட இன்னிங்சை ஆடுவதை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களின் ஆட்டத்தை பொறுத்தே மற்ற வீரர்களின் திட்டமிடுதலும் இருக்கும்.

பாகிஸ்தான் பவுலர் முகமது அமிர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல்பகுதியில் அவரது பந்து வீச்சு மிக துல்லியமாக இருந்தது. ஆடுகளத்தில் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அதனால் அவரது பந்து வீச்சை கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும். அதற்காக அவர் வீசும் பந்தை தடுத்து ஆட வேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்துடன் இந்திய பேட்ஸ்மேன்கள் களம் இறங்கக்கூடாது. ஏதுவாக வரும் பந்துகளை அடித்து விரட்ட தவறக்கூடாது. இந்திய வீரர்கள் தங்களது இயல்பான ஷாட்டுகளை அடிக்க வேண்டும்.

பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் என மூன்று துறைகளிலும் நாம் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். உடல்அசைவுகளில் நம்பிக்கை தெரிய வேண்டும். அது மிகவும் முக்கியமானது. இல்லாவிட்டால் எதிரணி பவுலர்களின் கை ஓங்கி விடும். இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

பேட் தயாரிக்கும் நிறுவனம் மீது தெண்டுல்கர் வழக்கு

இந்திய கிரிக்கெட்டின் சாதனை சிகரம் சச்சின் தெண்டுல்கர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ் மீது அங்குள்ள பெடரல் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். பேட்டை பிரபலப்படுத்துவதற்கு அவரது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த அந்த நிறுவனம் தெண்டுல்கரிடம் 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தபடி அந்த நிறுவனம் தெண்டுல்கருக்கு ஏறக்குறைய ரூ.13 கோடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த தொகையை வழங்கவில்லை. அதனால் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும்படி தெண்டுல்கர் கடிதம் அனுப்பினார். ஆனாலும் அந்த நிறுவனம் தெண்டுல்கரின் பெயர், புகைப்படத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்தே தெண்டுல்கர் அந்த தொகையை வழங்கக்கோரி இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார். வழக்கு வருகிற 26-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com