ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற நபர் கைது: பெங்களூரு போலீசார் அதிரடி

போலீசார் ரகசியமாக கண்காணித்து கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.
ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற நபர் கைது: பெங்களூரு போலீசார் அதிரடி
Published on

பெங்களூரு,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பெங்களூரு அணிக்குரிய ஆட்டங்கள் கப்பன் பூங்காவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளன. அதன்பேரில் போலீசார் ரகசியமாக கண்காணித்து கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பெங்களூரு-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக ஒருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் முதலில் நடந்த போட்டியில் 181 டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

தற்போது கடந்த 15-ந்தேதி நடந்த போட்டிக்கான 100 டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றபோது அவர் போலீசில் சிக்கி உள்ளார். விசாரணையில், அவர் சின்னசாமி மைதானத்தில் இருக்கும் லட்சுமி கேட்டரர்ஸ் உணவகத்தின் ஊழியராக வேலை பார்க்கும் சந்திரசேகர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற வழக்கில் கே.எஸ்.சி.ஏ. உறுப்பினரான கணேஷ் ஹரிகேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com