மணீஷ் பாண்டே அபாரம்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது கொல்கத்தா

கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது.
மணீஷ் பாண்டே அபாரம்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது கொல்கத்தா
Published on

கொல்கத்தா,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் பேட்டிங் ஆடிய மும்பை அணிக்கு தொடக்க அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிக்கல்டன் 6(7) ரன்களிலும், ரோகித் சர்மா 15(13) ரன்களிலும் அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய நமன் தீர் 0(3) ரன்களிலும் சூர்ய குமார் யாதவ் 15(6) ரன்களிலும் அவுட்டாகினர்.

இதையடுத்து திலக் வர்மா மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். அப்போது திலக் வர்மா7(12) மற்றும் பாண்டியா 7(7) ரன்கள் அடித்திருந்தபோது மழை குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 8 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆட்டம் எந்த ஓவர் குறைப்பும் இன்றி மீண்டும் துவங்கியது. களத்தில் இருந்த திலக் வர்மா - பாண்டியா ஜோடி நிதானமாக ஆடின ரன் சேர்த்தனர். அப்போது திலக் வர்மா 20(32) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பாண்டியாவும் 26(27) ரன்களில் அவுட்டானார். கார்பின் பாஷ் 32(18) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சவுரப் துபே, கேமரான் கிரீன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடியது.

அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பின் ஆலன் 8 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, அடுத்து வந்த மணீஷ் பாண்டேவுடன் மற்றொரு தொடக்க வீரர் ரஹானே ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய ரஹானே 21(17) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 4(8) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுபுறம் 6 பவுண்டரிகள் விளாசி, அரைசதம் நோக்கி முன்னேறிய மணீஷ் பாண்டே, 45(33) ரன்களில் போல்ட் ஆனார். ரோவ்மன் பாவெல் 40(30) ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com