

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் முதல் தர வீரரும் பயிற்சியாளருமான மைக்கேல் (மைக்) ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள மைக் ஸ்மித், இம்மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து தனது பொறுப்பை ஏற்கிறார்.
மைக் ஸ்மித், தென் ஆப்பிரிக்க உள்நாட்டு கிரிக்கெட்டிலும், உலகம் முழுவதும் பல்வேறு டி20 தொடர்களிலும் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் பயிற்சியாளராக செயல்பட்டதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை நன்கு அறிந்தவராகக் கருதப்படுகிறார்.