ரம்ஜான் நோன்பின்போது எனர்ஜி டிரிங் குடித்த சர்ச்சை.. மவுனம் கலைத்த முகமது ஷமி

முகமது ஷமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.

பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது சிறப்பான பந்துவீச்சால் பல வெற்றிகளைத் தேடித் தந்தாலும், முகமது ஷமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற விமர்சனங்களுக்கும், வெறுப்புப் பேச்சுகளுக்கும் ஆளாகி வருகிறார்.

அந்த வகையில் ரம்ஜான் மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஒன்றின்போது அவர் எனர்ஜி பானம் குடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது.

இந்தச் சம்பவம் குறித்து மவுனம் கலைத்துள்ள முகமது ஷமி, "நாங்கள் 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நாட்டுக்காக விளையாடுகிறோம். எங்களை நாங்களே தியாகம் செய்கிறோம். இது போன்ற சமயங்களில் நோன்பு இருப்பதற்கு எங்கள் சட்டத்திலேயே சில விதிவிலக்குகள் உள்ளன. நீங்கள் நாட்டிற்காக ஒரு பணியைச் செய்யும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது இந்த விதிவிலக்குகள் பொருந்தும். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள் சிலரை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காகச் செய்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் மதச் சட்டமே சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்குப் பதிலாக நாங்கள் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அந்த நோன்பை ஈடு செய்யலாம். நான் அதைச் செய்தேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com