

டர்பன்,
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்ததாக 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளஸிஸ், தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால், சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகளை தாரைவார்த்தது.
துவக்க வீரர் குயிண்டன் டிக் 34 ரன்களில் வெளியேறினர். ஹசிம் அம்லா 16 ரன்களில் வெளியேறினார். இருப்பினும், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் நங்கூரம் போல் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் டு பிளசிஸ் அடிக்கும் 9-வது சதம் இதுவாகும். டு பிளசிஸ் 112 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 120 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஷ்குமார் பந்து வீச்சில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.