ரஞ்சி கோப்பையில் ரவி சாஸ்திரியின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்

மும்பை வீரர்கள் பட்டியலில் முஷீர் கான் ஆறாவது வீரராக இணைந்துள்ளார்.
ரஞ்சி கோப்பையில்  ரவி சாஸ்திரியின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்
Published on: 

ரஞ்சி கோப்பை 2026-27 கிரிக்கெட் தொடரில், அரியானா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் இளம் ஆல்ரவுண்டர் முஷீர் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 185 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த முஷீர் கான், மும்பை அணி 430 ரன்கள் குவிக்க உதவினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய அரியானா அணிக்கு எதிராக இடதுகை சுழற்பந்து வீச்சில் மிரட்டிய அவர், 85 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அரியானா அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், அரியானா அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தது. ஒரே முதல் தரப் போட்டியில் சதம் அடித்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர்கள் பட்டியலில் முஷீர் கான் ஆறாவது வீரராக இணைந்துள்ளார்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு

இதற்கு முன்பு மதன் ரைஜி, தத்து பட்கர், வினூ மங்கட், பாலி உம்ரிகர் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். குறிப்பாக, 1990-91 ரஞ்சி கோப்பைத் தொடரில் ரவி சாஸ்திரி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதே சாதனையை முஷீர் கான் நிகழ்த்தியிருப்பது மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் இளைய சகோதரரான முஷீர், தனது ஆல்ரவுண்ட் திறமையால் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com