இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு - பின் ஆலன், பெர்குசனுக்கு இடம்!

ஒருநாள் தொடர் நவம்பர் 4-ஆம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.
நியூசிலாந்து அணி
Published on: 

ஆக்லாந்து,

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான அணியில் பின் ஆலன், லாக்கி பெர்குசன், ரச்சின் ரவீந்திரா, டிம் சீபர்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

நவம்பர் 4-ல் முதல் ஒருநாள் போட்டி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 22 முதல் நவம்பர் 1 வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, ஒருநாள் தொடர் நவம்பர் 4-ஆம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. தற்போது சொந்த மண்ணில் நடைபெற உள்ள தொடரிலும் சிறப்பாகச் செயல்பட அந்த அணி திட்டமிட்டுள்ளது.

கடைசி 2 போட்டிகளுக்கு தனி அணி

இந்த ஒருநாள் தொடருக்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இரண்டு அணிகளை அறிவித்துள்ளது. முதல் 3 போட்டிகளுக்குப் பிறகு சில வீரர்கள், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில் வெலிங்டன் செல்ல உள்ளனர். இதனால், 4 மற்றும் 5-வது ஒருநாள் போட்டிகளுக்காக 7 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட உள்ளனர்.

பின் ஆலன் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். டிம் சீபர்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக டி20 தொடரில் இடம்பெறாத ரச்சின் ரவீந்திரா, முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளார்.

முதல் 3 ஒருநாள் போட்டி

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், டெவோன் கான்வே, ஜேக்கப் டபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், வில் யங்.

4 மற்றும் 5-வது ஒருநாள் போட்டி

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டபி, மாட் பிஷர், லாக்கி பெர்குசன், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), பிளேர் டிக்னர், வில் யங்.

X

Daily Thanthi
www.dailythanthi.com