

மவுண்ட் மாங்கனுய்,
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும், தொடரில் நடைபெற்ற போட்டிகள் மிகவும் நெருக்கமாக இருந்ததாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 42.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
210 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் 48.1 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டிக்குப் பிறகு பேசிய சான்ட்னர், “இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினர். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுமே நன்றாகச் செயல்பட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களைச் சரியான நேரத்தில் மாற்றிப் பயன்படுத்தினார். நடுவில் தொடர்ந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்” என்றார்.
இந்திய அணியை 209 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் திருப்தி அடைந்ததாகக் கூறிய சான்ட்னர், ஆடுகளம் சற்று மெதுவாகவும், பந்துகள் ஒரே மாதிரியாக வராத வகையிலும் இருந்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “முதல் இன்னிங்ஸ் முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பேட்ஸ்மேன்களுக்கு உதவவில்லை. அதற்கேற்ப வீரர்கள் தங்களை மாற்றிக்கொண்டனர். குறிப்பாக, மைக்கேல் பிரேஸ்வெல் நடுவில் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினோம். 209 ரன்களுக்குள் இந்திய அணியைக் கட்டுப்படுத்தியது நல்ல விஷயம்” என்றார்.
தொடரின் முடிவு குறித்து பேசிய சான்ட்னர், “3-1 என்ற ஸ்கோரைப் பார்த்தால், தொடர் அவ்வளவு ஒருதலைப்பட்சமாக இருந்ததாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் போட்டிகள் இதைவிட நெருக்கமாக இருந்தன. நாங்களும் சிறப்பாக விளையாடினோம். மழையால் சில ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. டாஸ் முடிவுகளும் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை.
இருப்பினும், தொடரில் பல நல்ல விஷயங்கள் நடந்தன. கடைசிப் போட்டியிலும் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நேரம் தாக்குப்பிடித்திருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. வெவ்வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததும், அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டதும் நல்ல விஷயமாக அமைந்தது” என்று தெரிவித்தார்.