"ரோகித்தையே தூக்குனாங்க..." - இந்திய டி20 கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் கருத்து

ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
"ரோகித்தையே தூக்குனாங்க..." - இந்திய டி20 கேப்டன் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் கருத்து
Published on

மும்பை,

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியை இழக்கக்கூடும் என்ற தகவல் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரா?

இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்றும், அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியை மட்டுமல்லாமல், அணியில் தனது இடத்தையும் இழக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

"ரோகித் விஷயத்துக்குப் பிறகு இது ஆச்சரியமல்ல"

இந்நிலையில், இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைப், "எனக்கு இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ரோகித் சர்மா தனது கேப்டன் பதவியை இழந்தபோதுதான் நான் அதிர்ச்சியடைந்தேன். அதற்கு பிறகு இதுபோன்ற முடிவுகள் சாதாரணமாகவே தோன்றுகின்றன" என்று கூறினார்.

ரோகித்தின் முடிவை விட இது சிறிய விஷயம்

மேலும் பேசிய கைப், "இது ஒரு பெரிய முடிவுதான். ஆனால் ரோகித் சர்மாவை நீக்கிய முடிவு இதைவிட மூன்று மடங்கு பெரியது. அந்த முடிவு ஏற்கனவே நடந்துவிட்டதால், இது பிசிசிஐயின் நடைமுறையின் ஒரு பகுதியாகவே தெரிகிறது"என்று அவர் கூறினார்.

உலகக் கோப்பை வென்ற கேப்டனுக்கு ஆதரவு தேவை

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில், அவருக்கு இன்னும் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கைப் வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், "சூர்யா கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். எனவே அவர் அணியில் தொடர தகுதியானவர். தற்போது அவர் அதிக ரன்கள் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்"என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com