

கொழும்பு,
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், ஜிம் பாப்வே அணியும், குரூப்2-ல் இங்கிலாந்து, நியூ சிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணியும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங் கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த போட்டி தொடரில் சூப்பர் சுற்று ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணி கள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் (டி) 2-வது இடம் பெற்றது. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் (ஏ) 2-வது இடத்தை பிடித்தது.
நடப்பு தொடரில் பாகிஸ்தான் அணி பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஏற்கனவே 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. அதேநேரத்தில் நியூசிலாந்து அணி இந்த மைதானத்தில் முதல்முறையாக களம் இறங்குகிறது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 49 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் 24 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 23 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் முடிவில்லாமல் போனது. 20 ஓவர் உலகக் கோப்பையில் 7 முறை சந்தித்ததில் பாகிஸ்தான் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கொழும்பில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், பின் ஆலென், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி
பாகிஸ்தான்: சஹிப்சதா பர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆஹா (கேப் டன்), பாபர் அசாம், கவஜா நபி, ஷதப் கான், உஸ்மான் கான், முகமது நவாஸ் அல்லது பஹீம் அஷ்ரப், சல்மான் மிர்சா, உஸ்மான் தாரிக், அப் ரார் அகமது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.