

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நியூ சண்டிகாரில் நாளை தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் வருகிற 13, 17, 20-ந் தேதிகளில் முறையே தர்மசாலா, லக்னோ, சென்னையில் நடக்கின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் போட்டி அணியில் இடம் பிடித்திருந்த முன்னாள் கேப்டனான 37 வயது விராட் கோலி காயம் காரணமாக விலகி இருக்கிறார். இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு நட்சத்திர வீரரான ரோகித் சர்மாவும் காயம் காரணமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவர்களின் பங்கேற்பு முழுமையாக உடல்தகுதியைப் பொறுத்தே இருக்கும் என்று பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியிருந்தார். இந்த இரு வீரர்களும் அணியுடன் இணையும் முன், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்புத் திறன் மையத்தில் (CoE) நடைபெறும் உடல்தகுதிப் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், இதுவரை ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள மையத்திற்கு வரவில்லை. இதனால் அவர் ஆப்கானிஸ்தான் தொடரை முழுமையாகத் தவறவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடருக்காக இந்திய அணி அறிவித்த வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.