என்னால் மட்டுமே என்னை மீட்டெடுக்க முடியும் - வாழ்க்கை தடுமாறியது குறித்து பிரித்வி ஷா உருக்கம்

பிரித்வி ஷா தற்போது கம்பேக் கொடுக்க போராடி வருகிறார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட வீரர் பிரித்வி ஷா. 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி உலகக்கோப்பையை கோப்பை வென்று கொடுத்த பெருமைக்குரியவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.

மேலும் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியிலிருந்தும் உடல் தகுதி மற்றும் ஒழுங்கீனம் காரணமாக கழற்றிவிடப்பட்டார். அத்துடன் அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். 2025 தொடரிலும் எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.

கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டுமின்றி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் ஏராளமான கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டார். இதனால் அவரது வாழ்க்கை தடுமாற்றத்திற்குள்ளானது. தற்போது மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் தமது கெரியரில் இதுவரை செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதாக கூறும் பிரித்வி ஷா தவறான நண்பர்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டது வாழ்க்கை கெட்டுப்போக வழி வகுத்ததாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் போராடி கம்பேக் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நிறைய விஷயங்கள் இருந்தன. என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். அதை புரிந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன். கிரிக்கெட்டுக்கு குறைவான நேரத்தையே கொடுக்க ஆரம்பித்தேன். பொதுவாக 8 -12 மணி நேரங்கள் பயிற்சி செய்யக்கூடிய நான் பேட்டிங் செய்து அலுத்துப் போக மாட்டேன். அப்படிப்பட்ட நான் எனது கவனத்தை சிதற விட்டு 4 மணி நேரங்கள் மட்டுமே பயிற்சி எடுப்பதை ஒப்புக்கொள்கிறேன்.

நான் தவறான நண்பர்களை சேர்த்துக் கொண்டேன். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருந்தபோது எனக்கு சில தவறான நண்பர்கள் கிடைத்தார்கள். பின்னர் அவர்கள் என்னை இங்கும் அங்கும் அழைத்துச் சென்றனர். அதில் என்னுடைய வாழ்க்கை பாதை மாறிவிட்டது.

இதற்கிடையே என்னுடைய குடும்பத்தில் பிரச்சினை வந்தது. என்னுடைய தாத்தா இயற்கை எய்தினார். அவர் எனக்கு ரொம்பப் பிரியமானவர். அது போல உங்களிடம் சொல்ல முடியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது. எனது தவறுகளை ஒத்துக் கொள்கிறேன். எப்போதும் என்னுடைய தந்தை ஆதரவாக இருக்கிறார்

நான் இப்போது சரியான பாதையில் இருக்கிறேன். இப்போது நான் அடிப்படைகளுக்குத் திரும்பிவிட்டேன். 5 வருடத்திற்கு முன்பு செய்த விஷயங்களை மீண்டும் செய்ய தொடங்கியுள்ளேன். நான் என்னை நம்புகிறேன். எத்தனை பேர் என்னை நம்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என்னை நம்புகிறேன்.. என்னால் மட்டுமே என்னை மீண்டும் கொண்டு வர முடியும் என்று அப்பா கூறியுள்ளார். வேறு யாராலும் முடியாது. அதனால் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com