

ராவல்பிண்டி,
இலங்கை அணிகு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே பாகிஸ்தான் அணி 23 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, பாகிஸ்தான் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 23 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் லஹிரு உதாரா 4 ரன்களிலும், பசிந்து சூரியபந்தாரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த தினேஷ் சண்டிமல் 7 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 8 ரன்களிலும், தனஞ்ஜெயா டி சில்வா ஒரு ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் இலங்கை அணி 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் குசால் மெண்டிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 32 ரன்கள் எடுத்தார். சோனல் தினுஷா 21 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 35.3 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ், ரஸாவுல்லா, ஆமிர் ஜமால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சகிப் கான் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் அசான் அவைஸ், தையப் ஆரிஃப் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். தையப் ஆரிஃப் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய முகமது தஹா 8 ரன்களிலும், கேப்டன் பாபர் அசாம் 8 ரன்களிலும் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 118 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பிறகு அசான் அவைஸ் உடன் சகிப் கான் இணைந்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. அசான் அவைஸ் 47 ரன்களுடனும், சகிப் கான் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 23 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. முதல் இன்னிங்சில் முன்னிலையை அதிகரிக்க பாகிஸ்தான் அணி முயற்சிக்கும்.