டிராவில் முடிந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட்

இலங்கை அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தானைவிட 12 ரன்கள் கூடுதலாக எடுத்தது.
பாகிஸ்தான் - இலங்கை
Published on: 

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

பாகிஸ்தான் 434 ரன்கள்

ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அந்த அணியில் சவுத் ஷகீல் 93 ரன்களும், தய்யாப் ஆரிப் 57 ரன்களும், அராபத் மின்ஹாஸ் 52 ரன்களும், முகமது தாஹா 51 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் அசிதா பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

249 ரன்கள் சேர்த்த இலங்கை ஜோடி

தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 446 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் தனஞ்செய டி சில்வா 167 ரன்களும், கேப்டன் குசால் மெண்டிஸ் 119 ரன்களும் விளாசினர்.

5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 249 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் அறிமுக வீரர் சாகிப் கான் அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தானைவிட 12 ரன்கள் கூடுதலாக எடுத்தது.

சதத்தைத் தவறவிட்ட சவுத் ஷகீல்

12 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 125 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் சவுத் ஷகீல் நிதானமாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார். சதத்தை நெருங்கிய அவர் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 84.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்திருந்தபோது இரு அணிகளும் போட்டியை முடித்துக்கொள்ள முடிவு செய்து கைகுலுக்கின. இதனால் முதல் டெஸ்ட் போட்டி வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இலங்கை அணியின் மிலன் ரத்நாயக்கே 3 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

X