

அயர்லாந்து கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டி மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவை நீக்கப்பட்டு, 50 ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், அயர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டியும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், ஜிம்பாப்வே அணி விலகியதைத் தொடர்ந்து திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் முத்தரப்பு தொடர் மற்றும் டெஸ்ட் போட்டி ஆகியவை கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்குச் செல்லும் அயர்லாந்து அணி, முதலில் பாகிஸ்தான் ஏ அணியான ஷஹீன்ஸ் அணிக்கு எதிராக மூன்று 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பிறகு பாகிஸ்தான் தேசிய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆறு போட்டிகளும் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஜனவரி 9ஆம் தேதி பாகிஸ்தான் செல்லும் அயர்லாந்து அணி, ஜனவரி 13 முதல் 24ஆம் தேதி வரை போட்டிகளில் விளையாடுகிறது.
அயர்லாந்து அணி இந்தத் தொடரை எதிர்பார்த்து காத்திருப்பதற்கு முக்கியமான காரணம் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று ஆகும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள இந்தத் தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதே அயர்லாந்தின் இலக்காக உள்ளது. அதற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகவே பாகிஸ்தானுக்கு எதிரான ஆறு ஒருநாள் போட்டிகளும் அமைந்துள்ளன. இதுகுறித்து பேசிய கிரிக்கெட் அயர்லாந்து உயர் செயல்திறன் இயக்குநர் கிரேம் வெஸ்ட், உலகக்கோப்பைத் தகுதிச்சுற்றுக்கு முன்பாக வலுவான அணிக்கு எதிராக ஆறு 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவது வீரர்களின் தயார்நிலைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.