போதுமான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை: ஷாய் ஹோப் விளக்கம்

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
போதுமான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை:  ஷாய் ஹோப்  விளக்கம்
Published on: 

லக்னோ,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த அந்த அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர் ஷாய் ஹோப் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசினார். அவருடன் அகீல் ஹொசைன் 15 ரன்களும், ஷமர் ஸ்பிரிங்கர் 9 ரன்களும் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் நமன்தீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் டி20 போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 11 ரன்னிலும், அபிஷேக் சர்மா 21 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து இஷான் கிஷனுடன் சேர்ந்து கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி காட்டினார். அவர் வெறும் 42 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். ஐயரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 14.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்தது.

இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தோல்வி தொடர்பாக பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது,

உண்மையைச் சொன்னால், ஆட்டத்தின் பல பகுதிகளை நாம் சிறப்பாகச் செய்திருந்தாலும், இறுதிக்கட்டத்தில் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பேட்டிங்கில் கொஞ்சம் அதிகமாகவே அவசரப்பட்டு, குழப்பமான முறையில் விளையாடியதாக உணர்கிறேன்.

இந்தியாவில் விளையாடும்போது ஸ்கோர்போர்டில் போதுமான ரன்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக இலக்கை நிர்ணயிக்கும்போது கூடுதலாக 20 அல்லது 30 ரன்கள் முன்னிலை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இலக்கைத் தற்காத்துப் பந்துவீசும்போது, ஈரமான அவுட்ஃபீல்டு மற்றும் ஆடுகளத்தின் தன்மை காரணமாக பேட்டிங் சற்று எளிதாகிவிடும். அணியின் சேர்க்கையைப் பொறுத்தவரை, சில நேரங்களில் பந்துவீசக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் அதிகமாக இருந்தால் வெவ்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும். ஆனால் இன்று எங்களிடம் இருந்த வீரர்களைக் கொண்டுதான் அணியைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களுடைய திறமைக்கு ஏற்ப சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்று இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதற்குத் தேவையான அளவுக்கு எங்களால் செயல்பட முடியவில்லை. குறிப்பாக இங்கு இலக்கை நிர்ணயித்து அதைத் தற்காப்பது எப்போதுமே கடினம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com