

ஆமதாபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒருமுறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.
இந்த போட்டி தொடரில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கில் 5 ரன்களும், பட்லர் 7 ரன்களும், நிஷான் சிந்து 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். நிலைத்து விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் பிரபுல், ஷகிப் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அபிஷேக் சர்மா 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 11 ரன்களும், ரவிச்சந்திரன் 9 ரன்களும், சலில் அரோரா 16 ரன்களும், ஹென்றி கிளாசன் 14 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்னும், ஷிவாங் குமார் 4 ரன்னும், பேட் கம்மின்ஸ் 19 ரன்களும், பிரபுல் ஹின்ச் 3 ரன்னும் எடுத்து குஜராத் அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
முடிவில் ஐதராபாத் அணி 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபடா மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.