

நாக்பூர்,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் கால்இறுதியில் மும்பைகர்நாடகா அணிகள் மோதும் ஆட்டம் நாக்பூரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் பிரித்வி ஷா (2 ரன்) விக்கெட்டை வீழ்த்திய கர்நாடக அணி கேப்டன் வினய்குமார், தனது அடுத்த ஓவரில் முதல் மற்றும் 2வது பந்துகளில் முறையே ஜெய் பிஸ்டா (1 ரன்), ஆகாஷ் பர்கார் (0) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் 7 ரன்களுக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மும்பை அணி முதல் இன்னிங்சில் 56 ஓவர்களில் 173 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக குல்கர்னி 75 ரன்னும், ஹெர்வத்கர் 32 ரன்னும் எடுத்தனர். கர்நாடக அணி கேப்டன் வினய்குமார் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் நாக்அவுட் சுற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த 6வது வீரர், முதல் கேப்டன் என்ற பெருமையை வினய்குமார் பெற்றார். வினய்குமார் ரஞ்சி போட்டியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துவது இது 2வது முறையாகும்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 29 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. சமர்த் 40 ரன்னில் ஆட்டம் இழந்தார். அகர்வால் 62 ரன்னுடனும், கானைன் அப்பாஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.