

சென்னை,
ஐபிஎல் 2026 சாம்பியன் அணியான ஆர்சிபியில் இருந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோர்டான் காக்ஸ், இந்த ஐபிஎல் பயணம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்காத போதிலும், அணியில் இருந்த அனுபவம் அளவிட முடியாத பாடங்களை கற்றுக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து பேசிய ஜோர்டான் காக்ஸ், அவரது வழிகாட்டும் குணம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக தெரிவித்தார்.
"கோலி மைதானத்தில் எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறாரோ, அதே அளவு மைதானத்திற்கு வெளியே சக வீரர்களுக்கு உதவுபவராக இருக்கிறார். தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறார்" என்றார்.
நடப்பு சீசனில் ஆர்சிபியின் பிளேயிங் லெவனில் ஜோர்டான் காக்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், பல போட்டிகளில் மாற்று பீல்டராக களமிறங்கி அணியின் வெற்றிப் பயணத்தில் தனது பங்களிப்பை வழங்கினார்.
சாம்பியன் பட்டம் வென்ற அணியின் ஒரு பகுதியாக இருந்த அனுபவமும், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் கழித்த நேரமும், ஜோர்டான் காக்ஸின் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.