2027 உலகக் கோப்பை - ‘கில்லுக்கு வழிகாட்டிகளாக கோலி, ரோகித் இருப்பார்கள்’ - சுரேஷ் ரெய்னா

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, உலகக்கோப்பை அரங்கில் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர்.
2027 உலகக் கோப்பை - ‘கில்லுக்கு வழிகாட்டிகளாக கோலி, ரோகித் இருப்பார்கள்’ - சுரேஷ் ரெய்னா
Published on

புதுடெல்லி,

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு மிக முக்கிய பங்காற்றுவார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை நாயகர்கள் கோலியும் ரோகித்தும்

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்களாக திகழும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, உலகக்கோப்பை அரங்கில் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர். 2019 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா 9 போட்டிகளில் 648 ரன்கள் குவித்து தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். மேலும், ஒரே உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதேபோல், 2023 உலகக்கோப்பையில் விராட் கோலி 11 இன்னிங்ஸ்களில் 765 ரன்கள் குவித்து, ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

"அனுபவம் விலைமதிப்பற்றது" - ரெய்னா

பேட்டியில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:

"விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஐசிசி தொடர்களில் தங்களை நிரூபித்த ரன் மெஷின்கள். நாக்கவுட் போட்டிகளில் ஏற்படும் அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். உலகக்கோப்பை போன்ற பெரிய மேடைகளில் அனுபவம் மிக முக்கியமானது"

கில்லுக்கு பக்கபலமாக இருப்பார்கள்

மேலும் அவர் கூறுகையில்,

"2027 உலகக்கோப்பையில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்தும்போது, அவருக்குப் பக்கபலமாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இருப்பது மிகப்பெரிய சாதகமாக இருக்கும். மைதானத்திற்குள்ளும் வெளியேயும் அவர்களின் வழிகாட்டுதல் அணிக்கு பெரும் பலம் சேர்க்கும்" என்றார்.

ஆப்கானிஸ்தான் தொடரில் கோலி இல்லை

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது. அடுத்த இரண்டு போட்டிகள் லக்னோ (ஜூன் 17) மற்றும் சென்னை (ஜூன் 20) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

இதற்கிடையில், ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது விராட் கோலிக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com