பும்ராவுடனான மோதல் குறித்து மனம் திறந்த சாம் கான்ஸ்டாஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா 5-வது டெஸ்டின்போது பும்ரா - கான்ஸ்டாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
பும்ராவுடனான மோதல் குறித்து மனம் திறந்த சாம் கான்ஸ்டாஸ்
Published on

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னப்பா இது.... என்பது போல் இரு கைகளையும் விரித்தபடி கேட்க, எதிர்முனையில் நின்ற இளம் பேட்ஸ்மேன் கான்ஸ்டாஸ் அவரை ஏதோ சொல்லி சீண்டினார்.

இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு வார்த்தைகளை உதிர்த்தார். பிறகு நடுவர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் பும்ரா நேராக கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மனம் திறந்த சாம் கான்ஸ்டாஸ் கூறுகையில், "நான் அதிகம் பதற்றமடையவில்லை. அந்த சமயத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும். மேற்கொண்டு ஒரு ஓவர் வீச விடக்கூடாது என்ற நோக்கில் அவ்வாறு நடந்து கொண்டேன். அது என் தப்புதான். இது போன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால் கடைசி பந்தில் பும்ரா, கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி விட்டார். இந்த வெற்றி சிறந்த அணி செயல்திறனால் எங்களுக்கு கிடைத்தது' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com