

சில்ஹெட்,
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தநிலையில், தொடரை 1-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 5-ம் தேதி சில்ஹெட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அமிர் ஜாங்கூ 133 ரன்கள் விளாச, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்காளதேச அணிக்கு தவ்ஹித் ஹிரிடோய் மிகப்பெரிய பலமாக அமைந்தார். அபாரமாக விளையாடிய அவர் 242 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் வங்காளதேச அணி 386 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அந்த அணி 30 ரன்கள் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கவெம் ஹோட்ஜ் சிறப்பாக ஆடி 142 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதையடுத்து வங்காளதேச அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடைசி நாளான இன்று 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணிக்கு தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நம்பிக்கை அளித்தது.
ஹிரிடோய் 82 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 49 ரன்களும் எடுத்தனர். பின்னர் வங்காளதேச அணி 59 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து விளையாட முடியாததால் போட்டி டிராவில் முடிந்தது.
ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.