

ஆக்லாந்து,
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சீபர்ட் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 4ஆம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்காக நியூசிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளுக்கும் கடைசி இரண்டு போட்டிகளுக்கும் எனத் தனித்தனி அணிகளை அறிவித்துள்ளது.
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், டெவோன் கான்வே, ஜேக்கப் டபி, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், வில் யங், பிளேர் டிக்னர்.
4 மற்றும் 5-வது ஒருநாள் போட்டிகளுக்கு:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மேட் ஃபிஷர், லாக்கி ஃபெர்குசன், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), பிளேர் டிக்னர், வில் யங்.
நியூசிலாந்து அணி தொடர்பாக தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியதாவது,
2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், இந்தியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் நியூசிலாந்து அணிக்கு முக்கியமான வாய்ப்பாக இருக்கும். உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்காக ஏழு வீரர்களை அணியில் சேர்ப்பதன் மூலம் அணியின் மாற்று வீரர்களின் திறமையைச் சோதிக்கவும், உலகத் தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மதிப்பிடவும் முடியும்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளுக்கும் ஒருநாள் போட்டிகளுக்கும் இடையே சமநிலையைப் பேணுவது அவசியம். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில் சில வீரர்கள் ஒருநாள் தொடரிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்படுவார்கள்.இந்தத் தொடரில் மொத்தம் 21 வீரர்களைப் பயன்படுத்தும் அளவுக்கு நியூசிலாந்து அணியில் திறமையான வீரர்கள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வால்டர் கூறினார்.
லாக்கி பெர்குசன், ஃபின் ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்புவது அணிக்கு வலுசேர்க்கும் என்றும், இவர்கள் மூவரும் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய திறமையும் வெற்றியைத் தேடித்தரும் அனுபவமும் கொண்டவர்கள் என்றும் பாராட்டினார்.