டி20 கிரிக்கெட்டில் இளம் கேப்டன்... 15 வயதில் புதிய உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார்.
வைபவ் சூர்யவன்ஷி
Published on: 

இந்தூர்,

வெறும் 15 வயதில் பீகார் அணியின் கேப்டனாகக் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இளம் கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

17 வயது சாதனை

இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் பீகார் அணி தனது முதல் ஆட்டத்தில் சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார்.

அப்போது அவருக்கு 15 வயது 232 நாட்கள் மட்டுமே. இதன் மூலம் ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் ஒரு அணிக்குத் தலைமை தாங்கிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன்பு குரோஷியாவின் சாக் வுகுசிக், 17 வயது 311 நாட்களில் தனது நாட்டின் அணிக்குத் தலைமை தாங்கி டி20 சர்வதேசப் போட்டியில் களமிறங்கியதே சாதனையாக இருந்தது. கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி சைப்ரஸ் அணிக்கு எதிராக அவர் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். தற்போது வைபவ் அதை முறியடித்துள்ளார்.

பேட்டிங்கில் ஏமாற்றம்

இந்த போட்டியில் வைபவ் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சேத்தன் சகரியாவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய சவுராஷ்டிரா அணி 16.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பீகார் அணிக்காக முதல் 2 ஆட்டங்களில் மட்டும் அவர் கேப்டனாக செயல்பட உள்ளார். அதன்பிறகு, நவம்பர் 19-ம் தேதி கத்தாரின் தோஹாவில் தொடங்கும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாட உள்ளார்.

இளம் வயதிலேயே இந்திய அணியிலும், உள்ளூர் கிரிக்கெட்டிலும் கவனம் ஈர்த்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது கேப்டனாகவும் உலக சாதனை படைத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

X