' சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இவ்வளவு’... வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

தற்போதைய கிரிக்கெட் சூழலில் இளம் வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் முன்பைவிட அதிகமாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷி
Published on: 

மும்பை,

15 வயதிலேயே உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைவிட பெரிய பிராண்டாக வளர்ந்துவிட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சச்சினைப் போன்ற திறமை

மும்பையில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைப் பாராட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது நான் எங்கு சென்றாலும் வைபவ் சூர்யவன்ஷி பற்றித்தான் கேட்கிறார்கள். எனக்கு 14 வயதாக இருந்தபோது கணித வீட்டுப்பாடத்தை முடிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்தச் சிறுவன் இன்று உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.

இப்படிப்பட்ட திறமை எல்லோருக்கும் கிடைத்துவிடாது. திறமையின் அடிப்படையில் பார்த்தால், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இவ்வளவு பேசப்படும் இளம் வீரர் வைபவ்தான் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு அபாரமான திறமை அவரிடம் இருக்கிறது" என்றார்.

கவனம் சிதறக்கூடாது

தற்போதைய கிரிக்கெட் சூழலில் இளம் வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் முன்பைவிட அதிகமாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "வைபவ் வளர்ந்து சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக நாம் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் செய்யும் தவறுகளை வைத்து விமர்சிக்காமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இப்போது கிரிக்கெட்டில் பணமும் புகழும் அதிகமாகிவிட்டன. 15 வயதிலேயே அவருக்கு விளம்பர வாய்ப்புகள் உள்ளிட்ட பல அழைப்புகள் வருகின்றன.

ஒரு கிரிக்கெட் வீரராக அவர் இன்னும் வளர வேண்டியுள்ளது. ஆனால், ஏற்கெனவே ஒரு வீரராக இருப்பதைவிட பெரிய பிராண்டாகிவிட்டார். எனவே, எந்த வாய்ப்புகளை ஏற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய அவரைச் சுற்றி சரியான நபர்கள் இருக்க வேண்டும். குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவருக்கு வலுவான ஆதரவு மிகவும் அவசியம்" என்றார்.

X