இன்னும் பல விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது: இலங்கை கேப்டன்

பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இன்னும் பல விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது: இலங்கை கேப்டன்
Published on: 

ராவல்பிண்டி,

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 98 ரன்னும், பாகிஸ்தான் 325 ரன்னும் எடுத்தன. 227 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் முடிவில் 9 விக்கெட் டுக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 316 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிலன் ரத்னாயகே 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ், அமீர் ஜமால் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

இதையடுத்து 90 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இலங்கை

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்து இருந்தது. 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, 3 நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தோல்வி தொடர்பாக பேசிய இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ்,

“உண்மையைச் சொல்வதானால், தொடரின் முதல் கட்டத்தில் நாங்கள் தடுமாறினோம். நானும் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தோம். அதில் இருந்து பல சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது. இருப்பினும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் இன்னும் பல பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.

நாங்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பாகிஸ்தானில் தங்கியிருந்தோம். இங்கு எங்களது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்தோம். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பல சாதகமான அம்சங்கள் இருந்தன. முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களும் சில முக்கியமான பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டனர். எனது அணியின் செயல்பாட்டில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், எதிர்காலத்தில் இன்னும் பல விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர் இருப்பதால், அதற்காக இந்தக் குறைகளை சரிசெய்து தயாராக வேண்டும். என தெரிவித்துள்ளார்.

X