

கொல்கத்தா,
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க நாளில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் அபிரத் ரெட்டி அதிகபட்சமாக 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். கொடிமேலா ஹிமதேஜா 16 பந்துகளில் 25 ரன்களும், சாமா மிலிந்த் 12 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர்.
மும்பை தரப்பில் மேக்ஸ்வெல் சுவாமிநாதன் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும், சைராஜ் பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியான தொடக்கம் கொடுத்தார். அவர் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ஹர்திக் தமோரே 16 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து களமிறங்கிய முஷீர் கான் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 21 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருடன் ஷிவம் துபே 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மும்பை அணி 13.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் மும்பை அணி 41 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.