டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் சாதனையை தட்டிப்பறித்த பிரெவிஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பிரெவிஸ் மொத்தம் 14 சிக்சர்கள் பறக்கவிட்டார்.
image courtesy:twitter/@ProteasMenCSA
image courtesy:twitter/@ProteasMenCSA
Published on

கெய்ன்ஸ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 53 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62 ரன்கள் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும் டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன டிவால்ட் பிரேவிஸ் 14 சிக்சர் உள்பட 180 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய வீரர் விராட் கோலி 12 சிக்சர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை விராட் கோலியிடம் இருந்து பிரெவிஸ் தட்டிப்பறித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com