

தரோபா,
பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரோபாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. ஷான் மசூத் 88 ரன்களுடனும், சல்மான் ஆஹா ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூத் 163 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 7-வது சதம் இதுவாகும். அவருடன் இணைந்து நிதானமாக ஆடிய சல்மான் ஆஹா 20 ரன்னில் ஷமார் ஜோசப் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தன. அபாரமாக ஆடிய ஷான் மசூத் 109 ரன்னில் (184 பந்து, 12 பவுண்டரி) ஜஸ்டின் கிரீவ்ஸ் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 80.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 282 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்டும். கெமார் ரோச், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
29 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை ஆடியது.
இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஷமார் ஜோசப் 38 ரன்னில் வெளியேறினார். கீமர் ரோச் 18 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்குகிறது.