இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித், விராட் இடம்பெறுவார்களா..? வெளியான தகவல்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் ஆரம்பமாக உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.

இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். குறிப்பாக ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக மட்டுமன்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பியது காரணமாக அமைந்தது. இதன் காரணமாக பெரும் விமர்சனத்தை சந்தித்த ரோகித் சர்மா மீண்டும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகின.

இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவரின் கெரியர் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. அத்துடன் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் தொடரை வென்றதால் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் எதிர் வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் சொதப்பியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com