தோனியை முந்திய திலக் வர்மா... விராட் கோலிக்கு அடுத்த இடம் பிடித்து சாதனை

இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
திலக் வர்மா
Published on: 

வெலிங்டன்,

தோனியை முந்தி, விராட் கோலிக்கு அடுத்த இடம் பிடித்து திலக் வர்மா சாதனை படைத்துள்ளார்.

இரண்டாவது இடம்

இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா, நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் இலக்கை சேஸ் செய்யும்போது (குறைந்தபட்சம் 500 ரன்கள்) அதிக பேட்டிங் சராசரி கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

தடுமாறிய இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ஆனால், இந்திய அணிக்கு ஆட்டத்தின் நடுப்பகுதியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. 112 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. வெற்றி பெறுவது சவாலாக தெரிந்த அந்த சூழலில் திலக் வர்மா பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார்.

26 பந்துகளில் அரைசதம்

நெருக்கடியை சமாளித்த திலக் வர்மா, 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன் மூலம் இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-0

இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com