டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

10.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு திண்டுக்கல் அணி 112 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
image courtesy: TNPL twitter
image courtesy: TNPL twitter
Published on

சென்னை,

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.

அந்த அணியில் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மான் பப்னா, கனேஷ் மற்றும் அமித் சாத்விக் சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணி 100 ரன்களை கடக்க உதவினர். 19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மான் பாப்னா 26 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், சுபோத் பாட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விமல் குமார் - அஸ்வின் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் எடுத்த நிலையில் விமல் குமார் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் அரை சதம் கடந்தார்.

இறுதியில் 10.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு திண்டுக்கல் அணி 112 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com