டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
image courtesy: TNPL twitter
image courtesy: TNPL twitter
Published on

கோவை,

9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் தொடக்க நாளான நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கோவை கிங்சுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விஷால் வைத்யா (6 ரன்கள்), சுரேஷ் லோகேஷ்வர் (15 ரன்கள்) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

இதைத் தொடர்ந்து ஆந்த்ரே சித்தார்த், சச்சினுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடினாலும் அவர்களால் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. ஸ்கோர் 91 ரன்களை எட்டியபோது சித்தார்த் 25 ரன்களில் ரன்-அவுட் ஆனார். சற்று நேரத்தில் அரைசதம் அடித்த சச்சினும் (51 ரன்கள்) வெளியேறினார். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷாருக்கான் 25 ரன்களில் (14 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 8 விக்கெட்டுகளுக்கு 149 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணி சார்பில் சந்தீப் வாரியர், ஆர்.அஸ்வின், பெரியசாமி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதில் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி டி.என்.பி.எல்.-ல் தனது 50-வது விக்கெட்டை நேற்று கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து இரு சிக்சருடன் இலக்கை எட்ட வைத்த ஷிவம் சிங் 82 ரன்களுடனும் (50 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முன்னதாக அஸ்வின் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com