

7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை எளிதில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது திண்டுக்கல் டிரகன்ஸ் .
மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17ந் தேதி ஓய்வு தினமாகும். முதல் கட்ட போட்டிகள் இன்று முதல் 15ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் இன்று நத்தத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய திருப்பூர் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.அதிகபட்சமாக அமித் சாத்விக் 20 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 15.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஆல் அவுட் ஆனது.திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் புவனேஷ்வரன் மற்றும் நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. அதிகபட்சமாக அனுராக் ராஜேஷ் குமார் 39 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். விமல் குமார் 40 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க ஹன்னி சைனி 17 ரன்கள் சேர்க்க, இறுதியில் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்தது திண்டுக்கல். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை எளிதில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது திண்டுக்கல் டிரகன்ஸ் .