டி.என்.பி.எல்.: கடைசி பந்தில் சேலம் அணியை வீழ்த்தி திண்டுக்கல் திரில் வெற்றி

image courtesy:twitter/@TNPremierLeague
திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 36 ரன்கள் அடித்தார்.
நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கேப்டன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். சேலம் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அஸ்வின் 14 பந்துகளில் 36 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபா இந்திரஜித் 4 ரன்களிலும், மான் பாப்னா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதிரடியாக ஆடிய ஷிவம் சிங் 24 பந்துகளில் 34 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெயந்த் தனது பங்குக்கு 25 ரன்கள் அடித்து அவுட்டானார். இதனால் திண்டுக்கல் அணிக்கு நெருக்கடி உருவானது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் கை கோர்த்த ஹன்னி சைனி - விமல் குமார் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இருப்பினும் முக்கியமான தருணத்தில் விமல் குமார் (24 ரன்கள்), ஹன்னி சைனி (35 ரன்கள்) ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்த ஓவரை பொய்யாமொழி வீசினார்.
அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் திண்டுக்கல் அணி ஒரு விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டுமே அடித்தது. இதனால் இந்த ஆட்டத்தில் சேலம் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி 3 பந்துகளை எதிர்கொண்ட வருண் சக்ரவர்த்தில் சிக்சரும் பவுண்டரியும் விளாசி திண்டுக்கல் அணிக்கு கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்று கொடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. சேலம் தரப்பில் எம் முகமது மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.






