

திண்டுக்கல்,
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9
விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் பாலசுப்பிரமணியன் 42 ரன்களும், கேப்டன் ஷாருக் கான் 29 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 26 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் சாதகமாக அமையவில்லை. கோவை பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால், நெல்லை வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினர். அதே நேரத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு கட்டத்தில் நெல்லை அணிக்கு வெற்றி கடினமாகத் தெரிந்த நிலையில், ரித்திக் ஈஸ்வரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
அவரது அதிரடியான பேட்டிங்கில் பவுண்டரிகளும் சிக்சர்களும் பறந்தன. வெறும் 31 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாசிய ரித்திக், அரைசதத்தையும் கடந்தார். இறுதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தாலும், அதற்குள் நெல்லை வெற்றிக்கு தேவையான ரன்களை நெருங்கியிருந்தது.
இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து ஒரு பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. கோவை அணியின் சார்பில் தீபன் லிங்கேஷ் மற்றும் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் நெல்லை அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ள நெல்லை ராயல் கிங்ஸ் தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.